Detailed Description
நூதனமான மோசடிக்கு நாம் பல முன்னுதாரணங்களைச் செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். மோசடிக்காரர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். நமக்குக் கோபம் வருவதில்லை. ஏனெனில், நாம் பாதிக்கப்படவில்லை அல்லவா? ஆனால், முஸ்லிம் உலகம் காலங்காலமாக பல நூதன மோசடிகளைக் கண்டிருக்கின்றது. இன்றும் அவை மலிந்து கொண்டே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் அனைவருமே ஒருமித்து – இஜ்மாஃ உடன் – கோபங்கொள்கிற அளவு நூதன மோசடி நம்மைப் பாதிப்புக்குள்ளாக்கி வந்தாலும், அதன் இழப்பையும் வலியையும் உணர முடியாத கல்லாமை நஞ்சு ஊட்டப்பட்ட நிலைமையில் இருக்கிறோம்.
பித்அத் என்றால் நூதனம். நபியும் தோழர்களுமே அறியாத, செயல்படுத்தாத ஒரு நம்பிக்கையோ வணக்கமோ மதிப்பு மரியாதையுடன் முஸ்லிம் வாழ்க்கைக்குள் இடத்தைப் பிடிக்கும்போது ஒரு மோசடி அவரை மயக்கிவிடுகிறது. நற்கூலிக்காக இயங்கும் அவரின் நல்ல உள்ளத்தை ஷைத்தான் எப்படித் திசைதிருப்பி இழுத்துச் செல்கிறான்?! இந்தப் பரிதாபத்தின் உச்சம் அவர் ஏங்கிய நன்மையை இழப்பதோடு, தீமைக்கு மார்க்க அந்தஸ்து தந்த பாவத்தையும் சுமக்கிறார். பித்அத்தைவிட நூதன மோசடி இருக்க முடியுமா? ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) இந்த நூலில் முஸ்லிமின் மார்க்கத்தைச் சிதைத்து ஊனமாக்கும் பித்அத்தான கொள்கைகள், வணக்கங்கள் சிலவற்றின் கோர முகத்தை அம்பலப்படுத்துகிறார்கள்.