ஒரு புத்தகம் ஒரு தேசத்தை உருவாக்கி, ஒரு நூற்றாண்டைக்கூட மாற்றிவிடுகிற தாக்கம் செலுத்தலாம். இதற்குத் தகுதியான ஓர் உதாரணத்தை நமக்கு அருகிலுள்ள நூற்றாண்டிலிருந்து சொல்ல வேண்டுமானால் இந்த ஏகத்துவப் புத்தகத்தைச் சொல்லலாம். கிதாபுத் தவ்ஹீது எனும் பெயருடன் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை முஸ்லிம் உலகில் பெரியதொரு தாக்கத்தை இது தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. காரணம், அடியார்கள்மீது இருக்கின்ற அல்லாஹ்வின் உரிமையை உரக்கச் சொல்கின்ற மகத்தான புத்தகம் இது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த அல்முஜத்தித் – இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர், அல்அல்லாமா – மாமேதை, ஷெய்குல் இஸ்லாம் – இஸ்லாமியப் பேரறிஞர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அத்தமீமீ (ரஹ்) அவர்கள் இதைத் தொகுத்துள்ளார்கள். உண்மையில் இது அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிறுவி, அவன் ஒருவன் மட்டுமே எல்லா வணக்கங்களுக்கும் சொந்தக்காரன் என்பதை மிகவும் எளிமையாக முன்வைக்கின்றது. அதற்குத் திருக்குர்ஆன் வாக்கியங்களையும் நபிமொழிகளையும் தெளிவான ஆதாரங்களாக வரிசைப்படுத்துகின்றது. ஆகவேதான் இது மகத்தான மாற்றத்தை உள்ளங்களில் ஏற்படுத்தி எந்தத் தேசத்தில் இருப்பவரையும் கவர்ந்துவிடுகின்றது. திருக்குர்ஆனும் நபிவழியும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லுகின்ற அழகையும் ஆழத்தையும் அறிந்துகொள்ளக்கூடிய எந்த மனிதராக இருந்தாலும், அவர் எந்த நூற்றாண்டில் வாழ்பவராக இருந்தாலும், இதன் சத்தியத் தூதுக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்தால், அவர் ஓரிறைக் கொள்கையின் பிரகாசப் பாதையில் சொர்க்கத்தை அடைந்துவிடலாம். இதற்கான அறிவைத் தொகுத்து வழங்கும் ஏகத்துவ ஒளிவிளக்குதான் இந்தப் புத்தகம்.
Choosing a selection results in a full page refresh.