முதியோர்கள் இல்லாத வீடு தனிமையின் வீடு. இதை உணர்வுப்பூர்வமாக அறிய வேண்டுமானால், அவர்களின் இறந்த உடல் வீட்டிலிருந்து தூக்கிச் செல்லப்பட்டவுடன் உணரலாம். நோயாலும் பலவீனத்தாலும் வீடே கதி என்று எப்போதும் அங்கு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் ‘இனி இருக்கவே மாட்டார்கள்’ என்பதை அவர்களின் வெற்றிடம் காட்டுகிறது. தனிமை அந்த இடத்தில் நகராமல் உட்கார்ந்து கொள்கிறது. நாம் வெளியே போவதும் வருவதுமாக இருந்த நேரத்தில், அந்தச் சுதந்தரத்தை இழந்த முதியோர்கள் தனிமையுடன் அவ்வீட்டில் வாழ்ந்து வந்திருப்பார்கள். அவர்கள் போய்விட்ட பின், முழு வீட்டையும் தனிமை வேடிக்கை பார்க்கிறது. நாம் அதனுடன் வாழத் தொடங்கியிருப்போம். அவர்கள் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருக்கும். இப்போதுதான் நாம் அவர்களுக்கு வைத்த குறைகளை நினைத்துப் பார்ப்போம். அவர்களை நடத்திய விதம் சரியா என்று குற்றவுணர்ச்சி கொள்வோம். நாமும் ஒரு நாள் இதே முதுமையால் வீழ்த்தப்படும்போது நமது நிலை எப்படி இருக்குமோ என்று பயப்படத் தொடங்குவோம். நமது திமிர், ஆணவம், தம்பட்டம் என எல்லாமே உலுக்கப்படும். ஒருவரின் கையைப் பிடித்து நடக்கவோ, கைத்தடியைப் பிடித்துக்கொள்ளவோ பிடிமானம் தேவை என நினைப்பதுகூட ஒரு தனிமை உணர்வை உள்ளுக்குள் உருவாக்கிவிடும்.
Choosing a selection results in a full page refresh.