Detailed Description
இஸ்லாமின் தூண்கள் ஐந்து. ஈமானின் தூண்கள் ஆறு. மறுமையின் பெரிய அடையாளங்கள் பத்து. தினசரி கடமையான தொழுகைகள் ஐந்து. வானங்கள் ஏழு. இப்படியே பல விசயங்களை நாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேட்டிருப்போம். அவை நமது நினைவில் நன்கு பதிந்திருக்கும். விசாலமான ஒரு கருத்தை மிகச் சுருக்கமாக நமது நினைவில் வைத்துக் கொள்ள இந்தக் கணக்கு முறை மிகவும் பயனுள்ள வழிமுறை. இந்த உத்தியை அறிஞர்கள் மார்க்கத்தில் பல விசயங்களை எளிதில் புரிய வைக்கப் பயன்படுத்துவார்கள். உண்மையில் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதுதான் இது. ‘மூன்று பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவர் ஈமானின் ருசியை உணர்ந்தவராவார்’ என்ற நபிமொழி உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? அதே வழிமுறையில் நமது மேன்மைமிக்க இமாம்கள் பலரும் குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து கிடைக்கும் அறிவுச் செல்வமாகக் கணக்கிட்டு எடுத்துக் கொடுத்த ஒரு கொடை தான் இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம். ஒரே ஒரு விசயத்தை மட்டும் இங்குப் பேசவில்லை. இஸ்லாமின் தனித்துவமான பல அம்சங்களை முன் வைக்கின்ற இந்த புத்தகம் ஒரு வட்டத்தின் நடுவே உள்ள புள்ளியைப் போன்றது. அந்தப் புள்ளியிலிருந்து எல்லாத் திசைகளிலும் ஒரு பார்வையைச் சுழற்றினால் அதுதான் 360 டிகிரி கோணம். இங்கு 360 எண்ணிக்கை என்பது ஒரு குறிப்புதான். இஸ்லாம் 360 நமக்குப் பல கோணங்களிலும் மிக முக்கியமான குறிப்புகளை வாசிக்க வழங்குகிறது. அது பெரும் இமாம்கள் எழுதிய நூல்களின் சாராம்சத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பிழிந்து தருகிறது.