Detailed Description
எதிரிகளிடம் யாருமே உபதேசம் கேட்க விரும்புவதில்லை. என்ன காரணம்? அவர்கள் நமக்குக் கேடு நினைப்பார்கள் என்றுதானே? அது சரி, ஆனால் நமது நலன் விரும்பிகளின் உபதேசத்தையும் உதறிவிட்டு ஓடுகிறோம் இல்லையா, அது ஏன்? ‘அதுவா? அவர்கள் இப்படியே உபதேசித்துக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் கேட்டதுதான்’ என்ற அலட்சியம். சரியா? நில்லுங்கள். ‘இனி கேட்க முடியாது. இதுதான் இறுதி உபதேசம். என் உயிர் பிரிகின்ற காலம் வந்துவிட்டது. இப்போது சொல்வதைக் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றோர் உபதேசம் நமது உள்ளத்தைத் தொட்டு நுழைந்தால் எப்படி அதை எதிர்கொள்வோம்? விடுங்கள். நமது உயிரினும் மேலான நபியின் குரலைக் கேட்கவே நற்பேறு கிட்டாத நமக்கு, அவர்களின் உயிர் பிரியும் காலம் நெருங்கிய கடைசிக் காலத்தில் அவர்கள் நமக்குச் சொன்ன இறுதி உபதேசம் ஒன்றைக் கேட்க காதுகள் கிட்டினால் எப்படித் துடிப்போம்?
பிரபஞ்சத்தின் படைப்பில் நமது நபியைவிட மேலான நமக்கான நலன் விரும்பியைத் தெரியுமா? மரணப் படுக்கையில் சொல்லச் சொல்ல உயில் எழுதப்பட்டு உயிர் பிரிந்த உருக்கமான பிரிவுக் கதைகள் உறவுகளில் கேட்டிருப்போமே? இதோ, எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபி ஓர் அதிகாலைத் தொழுகைக்குப் பின் தனது உம்மத்திற்குச் சொல்ல சொல்ல உருகி அழுது தோழர்கள் ஒப்புவித்த உயிலை அறிந்தோமா? இறந்தவரின் இறுதி உபதேசம் (வஸிய்யத்) ஒரு நிழல் போல நம்மைப் பின்தொடர்ந்தால், அவர் நமது இதயத்தில் நாற்காலி போட்டு ஆட்சி செய்கிறார். அவருக்குக் கட்டுப்படுவோம். நாமோ அவரையே அறியாத இருட்டில் இருந்தால் எப்படி நிழலை அறிவோம்? ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்த நூலில் இறுதி நபியின் உயிலை விவரிக்கிறார். அந்தச் சூழல், அந்த இடம், அந்த நேரம், அதன் தாக்கம், அதன் அரசியல் ஒவ்வொன்றையும் சமூக அக்கறையுடன் எழுதுகிறார்.